மதுரை: மதுரை மாநகராட்சியில் 40 முக்கிய வருவாய் இனங்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ‘டெண்டர்’ விடாமல் மாநகராட்சியே எடுத்து நடத்தி வருகிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் பின்னணியில் டெண்டர்தாரர்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து புறக்கணிப்பதால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் வருவாய் இழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு வரி வருவாய், வரியில்லா வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.480 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இதில், சொத்து வரி மூலம் மட்டுமே ரூ.365 கோடி வருவாய் கிடைக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக டெண்டர் விடப்படும் வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை வருவாய் இனங்களை டெண்டர் விட வேண்டும். ஆனால், டெண்டர் தேதி முடிந்தும், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டெண்டர் விடப்படாத வருவாய் இனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், அதனை ஏலம் விடாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.