சென்னை: மூன்று அமைச்சர்களை கடந்து வந்த ஒரே சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் சட்டம் 1982-ல் திருத்தம் கொண்டு வந்து, அதில் உயிரி- மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) கொட்டும் குற்றவாளிகளையும் இணைப்பதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் கடந்த 26ம்தேதி கொண்டு வரப்பட்டது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகார வரம்பில் அந்த சட்டம் இருந்தது. ஆனால் 26ம் தேதி சட்டப் பேரவையில் அமைச்சராக செந்தில் பாலாஜி வீற்றிருந்த நிலையில் அந்த சட்டத் திருத்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து 27ம் தேதி விலகினார். அவர் வகித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் மாற்றப்பட்டது. எனவே நேற்று சட்டப் பேரவையில் ஆய்வுக்காக அந்த மசோதா எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதில் அமைச்சர் முத்துசாமி பதிலளித்து பேசினார். ஆக, ஒரே சட்ட மசோதா 3 அமைச்சர்களை கடந்து வந்து சட்டப் பேரவையில் நேற்று நிறைவேறியது.
The post 3 அமைச்சர்களை கடந்து வந்த ஒரே சட்ட மசோதா: குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றம் appeared first on Dinakaran.