3-0 என தொடரை கைப்பற்றிய இந்தியா; சாம்பியன் அணியாக உருவாக அனைவரும் சிறப்பாக ஆட வேண்டும்: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

3 hours ago 3

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 356 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112, ஸ்ரேயாஸ் 78, விராட் கோஹ்லி 52, கே.எல்.ராகுல் 40 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 142ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றி, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ரானா, அக்சர்பட்டேல், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர். கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: இன்று நான் ஒரு அபாரமான பந்தில் தான் ஆட்டம் இழந்தேன். அதைப் பற்றி ஒன்னும் செய்ய முடியாது. இந்த தொடரில் நாங்கள் பெரிய அளவில் எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால் சில இடங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அது என்னவென்று இப்போது என்னால் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் உத்வேகத்துடன் தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டும்.

நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வீரர்களிடம் தெளிவாக சொல்லிவிடுகிறோம். ஒரு சாம்பியன் அணி உருவாக வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டு முன் நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரர்களுக்கும் முழு சுதந்திரத்தை அளிக்கிறோம். உங்களுக்கு எப்படி இஷ்டமோ, அதேபோல் விளையாடுங்கள் என்று தான் நான் கூறி வருகிறேன். இதை தான் நாங்கள் உலக கோப்பை தொடரிலும் செய்தோம். இதை தான் நாங்கள் இனிவரும் தொடர்களிலும் செய்வோம். சில சமயங்கள் இதுபோல் இருக்கும்போது, சில போட்டிகளில் நம்மால் வெற்றி பெற முடியாது. ஆனால் அதைப் பற்றி கவலை இல்லை’’ என்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியதாவது: ஒட்டுமொத்த தொடரும் ஒரே மாதிரி தான் இருந்தது. நாங்கள் ஆட்டத்தின் சில பகுதிகளில் எதிரணியை மிரட்டும் வகையில் செயல்பட்டோம். ஆனால் ஒரு சிறந்த அணியால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் அணுகுமுறை சரிதான்.

அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருக்கிறது. எங்கள் அதிரடி அணுகுமுறையை சரியாக எப்படி செயல்படுத்துவது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வழியை நாங்கள் தேடுகிறோம்’’ என்றார். எனது சிறந்த இன்னிங்சில் ஒன்று ஆட்ட மற்றும் தொடர் நாயகன் (259 ரன்) விருது பெற்ற கில் கூறுகையில், “அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி. இது நிச்சயமாக நான் ஆடிய சிறந்த இன்னிங்சுகளில் இதுவும் ஒன்று. ஆடுகளம் தொடக்கத்தில் கொஞ்சம் சவால் கொடுத்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை பயன்படுத்தி நன்றாக பந்து வீசினர். அதை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது மன நிறைவை கொடுத்திருக்கிறது. நான் அதிகமாக எதையும் யோசிக்கவில்லை. நம் முன் வீசப்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றி இருக்கிறது’’ என்றார்.

 

The post 3-0 என தொடரை கைப்பற்றிய இந்தியா; சாம்பியன் அணியாக உருவாக அனைவரும் சிறப்பாக ஆட வேண்டும்: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article