ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆதரித்து சீமான் பிரசாரம் செய்யும்போது, ‘‘உன் பெரியார் வைத்துள்ளது வெங்காயம். என் தலைவன் (பிரபாகரன்) வைத்துள்ளது வெடிகுண்டு. நீ பெரியார் தந்த வெங்காயத்தை என் மீது வீசு. நான் என் தலைவன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். நான் வீசினால், உன்னை புதைத்த இடத்தில் புல் முளைக்காது’’ என பேசியிருந்தார்.
இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பியிடமும் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 20ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் தரக்கோரி, கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் சீமான் வீட்டிற்கு கடந்த 17ம் தேதி நேரில் சென்று, சம்மன் வழங்கினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. மாறாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நன்மாறன் ஆஜராகி சீமான் வழங்கிய கடிதத்தை வழங்கி, விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில், சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சென்னைக்கு விரைந்தனர். ஆனால், சீமான் வீட்டில் இல்லாததால், சீமானிடம் சம்மனை வழங்குவதற்காக சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர். நேற்று மாலைதான் சீமான் சென்னை வந்தார். வந்த உடன் நேராக வளவசரவாக்கம் காவல்நிலையத்தில் நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானார். இதனால், இன்று சீமானிடம் ஈரோடு போலீசார் சம்மன் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
The post 2வது முறையாக ஈரோடு போலீஸ் சீமானுக்கு சம்மன் appeared first on Dinakaran.