2வது மனைவி கொலையில் கைதான பாஜ பிரமுகர் மீது மோசடி புகார்

3 hours ago 3

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள லிங்கம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன்(30). இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல கடந்த 2023ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூரில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பாஜகவை சேர்ந்த பாலன்(45) என்பவரை அணுகினார். அப்போது போலந்து நாட்டில் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் கட்டிட கட்டுமான பணியில் ஸ்டீல் பிக்சிங் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், அந்த வேலைக்கு ரூ.4 லட்சம் செலவாகும், முன் பணமாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், விசா வந்தவுடன் மீதித்தொகை ரூ. 2 லட்சத்தை தரவேண்டும் எனவும் கூறி மதியழகனின் பாஸ்போர்ட்டை வாங்கியுள்ளார்.

அதன்படி மதியழகன் ரூ.1.30 லட்சத்தை பாலனின் வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்பின் துவரங்குறிச்சிக்கு வந்த பாலனிடம் ரூ.70 ஆயிரத்தை நேரடியாக கொடுத்துள்ளார். ஆனால், விசா வாங்கித் தராமல் ஏமாற்றிய பாலன், அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து மதியழகன் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பட்டுக்கோட்டையில் பாலனின் 2வது மனைவி சரண்யா கொலை செய்யப்பட்டார். அதன் பின்னரே பட்டுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் பாலன் இருப்பது மதியழகனுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாலன் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தையும், பாஸ்போர்ட்டையும் மீட்டுத்தருமாறு துவரங்குறிச்சி போலீசில் மீண்டும் நேற்று மதியழகன் புகார் அளித்துள்ளார். மனைவி கொலை வழக்கில் பாலன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2வது மனைவி கொலையில் கைதான பாஜ பிரமுகர் மீது மோசடி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article