திருவண்ணாமலை, அக்.18: திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலை நினைக்க முக்தித் தரும் தென்னகத்து கயிலாயமாக வணங்கப்படுகிறது. இங்குள்ள மலையே மகேசன் என்பதால் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில், புரட்டாசி மாதத்தில் 2 பவுர்ணமி அமைந்தது. அதன்படி, இம்மாதத்தின் இரண்டாவது பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு தொடங்கி, நேற்று மாலை 5.38 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 5.38 மணிவரை அமைந்திருந்ததால், பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று மாலைக்கு பிறகு படிப்படியாக கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக, கனமழைக்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, திருவண்ணாமலைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனாலும், அதிஷ்டவசமாக கடந்த 2 நாட்களும் சிறு தூறல்கூட இல்லாமல், மழை தணிந்தது பக்தர்கள் கிரிவலத்துக்கு உதவியாக அமைந்தது.
அதனால், கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஆனாலும், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. குறிப்பாக, கார், வேன்களில் குவியும் பக்தர்கள் வருகையும் ஓரளவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதிகாலையில் இருந்தே தரிசனத்துக்காக கோயில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனால், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும், 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று முடித்த சோர்வையும் பொருட்படுத்தாமல், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்திருந்த நிலையில், பொது தரிசன தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 2 நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதையொட்டி, நேற்று பிற்பகல் வரை தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. நேற்று மாலைக்கு பிறகு வழக்கமான மத்திய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியது. மேலும், திருவண்ணாமலையில் இருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரையிலும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்களில் வழக்கம்போல கூட்ட நெரிசல் காணப்பட்டது.
The post 2வது நாளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது * நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.