ஈரோடு, மே 16: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டன. இதன் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதில், 15 அரசுத்துறைகளை சேர்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு, தீர்வு காணப்படவுள்ளன. அந்த வகையில் பெருந்துறை வட்டத்தில் துடுப்பதி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், ஈங்கூர், கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நேற்று முன்தினம் இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 900 மனுக்கள் பெறப்பட்டு அதில் 82 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.
இதில், 2வது நாளாக நேற்றும் பெருந்துறை வட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் திருவாச்சி ஊராட்சி, அரசு உயர்நிலை பள்ளி, முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திங்களூர் ஊராட்சி, செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சீனாபுரம் ஊராட்சி நெட்டசெல்லாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மூங்கில்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து 1,054 மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வாக 26 பயனாளிகளுக்கு புதிய வீட்டுவரி ரசீது, வீட்டுவரி ரசீது பெயர் மாற்றம் மற்றும் சொத்துவரி ரசீது, புதிய குடிநீர் இணைப்பு மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கினர்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 123 பயனாளிகளுக்கு ரூ.28.66 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்பி அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் குருசரஸ்வதி, தமிழ்ச்செல்வி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் செல்வராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 2ம் நாளாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: ரூ.28 லட்சம் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.