26ம் தேதி அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசாரணை கைதிகள் விடுதலை?.. அமித் ஷா அறிவிப்பால் பெரும் எதிர்பார்ப்பு

1 month ago 6


காந்திநகர்: 26ம் தேதி அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு நீதி கிடைக்கும் என்று அமித் ஷா அறிவித்துள்ளதால், அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்த 50வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் (ஏஐபிஎஸ்சி) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசுகையில், ‘வரும் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் சிறையில் இருக்கும் அனைத்து விசாரணைக் கைதிகளுக்கும், அதிகபட்ச தண்டனையில் மூன்றில் ஒரு பங்கை முடித்தவர்களுக்கும் வரும் 26ம் தேதி அரசியலமைப்பு தினத்திற்கு முன் நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். நீதிமன்றம், காவல்துறை தொடர்பாக 60 விதிகளை வகுத்துள்ளோம்.

இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழக்கை முடிக்க முடியும். அதேபோல் சிறைத்துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சைபர் கிரைம், ஊடுருவல், ட்ரோன்களின் சட்டவிரோத பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல் போன்ற சவாலான குற்றங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவற்றை எதிர்கொள்ள காவல் மற்றும் புலனாய்வு துறைகள் திறம்பட செயல்பட வேண்டும். குற்றங்களை குறைக்க ஏஐபிஎஸ்சி அமைப்பு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தரவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விசாரணைகள் முடிக்கப்படும்.

உச்ச நீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள முடியும். நாடு முழுவதும் உள்ள 70,000 காவல் நிலையங்கள் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 22,000 நீதிமன்றங்கள் இ-கோர்ட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன’ என்றார். சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு வரும் 26ம் தேதி அரசியலமைப்பு தினத்திற்கு முன் நீதி கிடைக்கும் என அமித் ஷா அறிவித்துள்ளதால், அவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post 26ம் தேதி அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசாரணை கைதிகள் விடுதலை?.. அமித் ஷா அறிவிப்பால் பெரும் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article