
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், அனைத்து வட்டாரங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்படும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் பணிக்கு பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் (ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை) வழங்கப்படும்.
பொது மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினர் 21 வயது முதல் 40 வயது வரையும், பழங்குடியினர் 18 வயது முதல் 40 வயது வரையும், விதவை கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். குறைவான பார்வைத்திறன், உடல் இயக்க குறைபாடு, குணப்படுத்தப்பட்ட தொழுநோய், திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு கொண்டவர்கள் உரிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, ஆதார் கார்டு, சாதிச்சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்றோர் பெண்கள் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் ஆகியவற்றை சேர்த்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.