சென்னை: 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என அறிவித்தார்.
முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 05.06.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே2) துறை, நாள் 08.05.2025-மூலம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள்.
The post 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.