சென்னை: விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் கற்குழை தெருவில் நின்று கொண்டிருந்த சதீஷ் (32), ரவி (30) ஆகியோரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடம் 23 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சதீசுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ரவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை தந்து அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பளித்தார்.
The post 23 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.