
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த மாதம் 21ம் தேதி அந்த மலைப்பகுதியை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற்ற இந்த மோதலில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில், 16 பேர் பெண் மாவோயிஸ்டுகள் ஆவர். இந்த மோதலின்போது 40 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடிகள் செயலிழக்கப்பட்டன. 450 ஐஇடி வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவோயிஸ்டுகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. 12 ஆயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
அதேவேளை, மாவோயிஸ்டுகள் மீதான நடவடிக்கைக்கு உள்துறை மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒருகாலத்தில் சிவப்பு பயங்கவாதத்தால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் தற்போது மூவர்ணக் கொடி பறக்கிறது. 2026 மார்ச்சிக்குள் நாட்டில் நக்சலிசம் முழுவதும் ஒழிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.