
லாஸ் ஏஞ்சல்ஸ்,
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வர எடுக்கப்பட்ட நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக 2023-ம் ஆண்டு வெற்றி பெற்றது.
அதன்படி 128 ஆண்டுகளுக்கு பிறகு 2028-ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது.
இந்த கிரிக்கெட் அணி 6 அணிகள் பங்கேற்கும் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற போட்டிகளை போலவே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இருப்பினும் அந்த 6 அணிகள் எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெற்கு கலிபோர்னியாவின் பொமோனாவில் உள்ள பேர்கிரவுண்ட்ஸ், என்ற இடத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.