
சென்னை,
வடபழனி மாநகராட்சி பூங்கா:-
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் தியாகராயநகர் தொகுதி 130-வது வார்டு வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வடபழனியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சுமார் 2,010 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 லட்சம் மதிப்பீட்டில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், பூஞ்செடிகள், கழிவறைகள் என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.
30 புதிய பூங்கா:-
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள் மேம்படுத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்கங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் 2025 - 2026ம் ஆண்டில் 30 புதிய பூங்காக்கள் 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. 273 பூங்காக்கள் 30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
தொல்காப்பியர் பூங்கா சீரமைப்பு பணி:-
தொல்காப்பியர் பூங்கா பாழடைந்த நிலையில் உள்ளதாகவும் அதனை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொல்காப்பியர் பூங்கா மறைந்த முன்னாள் முதல-அமைச்சர் கருணாநிதி காலத்தில் திறந்து வைக்கப்பட்டதாகவும், பத்தாண்டு காலம் பராமரிப்பு இல்லாமல் போடப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தற்போது தொல்காப்பியர் பூங்காவில் புதிய நுழைவாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர்கள் மாடம், அரங்கம், இணைப்பு பாலம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளதோடு விரைவில் முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.