2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி!

2 hours ago 1

சென்னை : 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்’ என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி பி. டி. ஆஷா விசாரித்தார். அப்போது, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை என்று கூறி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் உள்ளதாக கூறி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Read Entire Article