
துபாய்,
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியும் சாதனை படைத்தார்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக முழு மூச்சுடன் தயாராகி வரும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உணவு கட்டுப்பாடு குறித்து மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "2015-ம் ஆண்டுக்கு பிறகு நான் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறேன். இரவில் மட்டும் சாப்பிட்டு வருகிறேன். காலை மற்றும் மதியம் சாப்பிடுவது கிடையாது. இதுபோன்ற உணவு முறையை கடைபிடிப்பது கடினமானதாகும். ஆனால் அதற்கு நீங்கள் பழகிவிட்டால் எளிதாகி விடும். நான் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியை மேற்கொள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றபோது உடல் எடை 90 கிலோவை எட்டியது. பயிற்சியின்போது 9 கிலோ எடையை குறைத்தேன். இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதில் இருந்து விலகியே இருக்கிறேன். எதையெல்லாம் சாப்பிடக்கூடாதோ அதில் இருந்தும் தள்ளியே இருக்கிறேன். சில நேரத்தில் மட்டும் பிரியாணி சாப்பிடுவேன்' என்று கூறினார்.