சென்னை: குரூப் 2ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை சுமார் 21 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர்(கிரேடு 2) என 534 பணியிடங்கள் அடங்கும்.
குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர், காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து உதவியாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு நேற்று நடந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வும் நடந்தது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாள்I தமிழ்மொழி தகுதி தேர்வும் நடந்தது. பொது அறிவு தேர்வு எழுத 21,563 பேரும், பொதுத்தமிழ் தேர்வை 16,457 ேபரும், பொது ஆங்கிலம் தேர்வை 5,106 பேரும் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் நடைபெற்ற தமிழ்மொழி தகுதி தேர்வை 21,607 பேர் எழுதினர்.
இதற்காக தமிழகம் முழுவதும் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி என்.கே.டி. ஆண்கள் மேல்நிலை பள்ளி, விருகம்பாக்கம் அவிச்சி மேல்நிலைப்பள்ளி, அயனாவரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 பள்ளிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. பொது அறிவியலில் 100 வினாக்களும், பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவில் 40 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 60 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், காலை 7 மணி முதலே தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு வந்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post 2006 பதவிக்கு குரூப் 2ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 21,000 பேர் எழுதினர்: தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.