சென்னை: சென்னையில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. மேலும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் அடுத்த 2 நாட்களுக்கு 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மிதமான மழையும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும்; சென்னைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.