சென்னை: மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை ஆழ்வார் பேட்டையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: எனக்கு வாக்களிக்காதவர்களும் எனது உறவுகள்தான்.
எனக்கு காந்தியைப் பிடிக்கும் அளவுக்கு பெரியாரையும் பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன்தான். எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம்முடைய பணிகள் தொடரும்.
இந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள், இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் மொழிக்காக உயிரையே விட்டுள்ளனர். பச்சைக்குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.
நாம் வளர்த்த அந்தக் குழந்தைக்கு இன்று 8 வயதாகிறது. இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த ஆண்டு உங்கள் குரல் சட்டசபையில் ஒலிக்கப்போகிறது. அதற்கு கட்டியம் கூறும் விழாதான் இது. ஒவ்வொரு ஆண்டையும் நாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம்.
நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வராதது என் தோல்விதான். அடுத்த ஆண்டு சட்டமன்றம் என்பது வெறும் பேச்சாக இருந்துவிடக் கூடாது. நீங்கள் ஒளிரும் தீபம் என்றால், அதை இன்னொருவருக்கு ஏற்றி வைக்க வேண்டும். நான் முதல்வர் ஆவதற்காக இங்கு வரவில்லை. முதலில் இருந்து எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன்.
இது ஒரு நாடு. இதைப் பிரித்தாள முடியாது. அப்படி நினைப்பவர்கள் எல்லாம் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும். இதை நீங்கள் பல மொழிகளில் சொல்ல வேண்டும். ஆனால், நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழிப் போராட்டத்தில் அரை டவுசர் போட்டுக்கொண்டு பங்கேற்ற பையன். இனிமேல் வலியுறுத்த மாட்டேன் என்று, மேல் தலைமை வலியுறுத்திய பிறகு அமைதி அடைந்தோம். அதற்குப் பிறகு நான் இந்திப் படங்களில் கூட நடித்தேன். ஆனால், எனக்கு ஒரு வார்த்தை கூட இந்தி தெரியாது.
அதுபோல், உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால், சீன மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவன செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்யக்கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
The post 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வராதது தோல்வி: கமல்ஹாசன் பேச்சு appeared first on Dinakaran.