2-வது டெஸ்ட்: பும்ரா விளையாட தயார்... ஆனால்.. - இந்திய துணை பயிற்சியாளர் தகவல்

13 hours ago 1

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை பர்மிங்காமில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணியினரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த தொடரில் பும்ரா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அவர் இல்லாமல் போனால் அது இந்திய அணிக்கு நிச்சயம் பலத்த பின்னடைவுதான். ஏனெனில் முதல் போட்டியில் அவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை.

இந்நிலையில் 2-வது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரையான் டென் டஸ்சாட் புதிய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "பும்ரா இந்த போட்டியில் விளையாட தயார்தான். ஆனால் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை" என்று கூறினார்.

Read Entire Article