
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டா என்ற செய்திகள் காணப்படுகின்றன. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் பும்ரா இல்லையென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். அதுபோக ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்தியா தங்களுடைய அணியை தவறாக தேர்ந்தெடுத்தது என்று நினைக்கிறேன். ஷர்துல் தாகூருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் விளையாடியிருக்க வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டு ஸ்பின்னருக்கு எதிராக தடுமாறுவார்கள் என்பதால் குல்தீப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார்.
ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா 2-வது போட்டியில் ஓய்வு எடுத்தால் நான் அர்ஷ்தீப் சிங்கை அணிக்குள் கொண்டு வர விரும்புவேன். இடது கை பவுலரான அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து இந்தியாவின் பவுலிங் அட்டாக்கில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார். பிரசித் கிருஷ்ணா கடந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் முன்னேற்றத்தைக் காண்பித்தார்.
இருப்பினும் இந்திய அணியின் பவுலிங் துறை விக்கெட் எடுப்பதில் தடுமாறுகிறது. ஆனால் இது பதற்றம் அடைவதற்கான நிலை கிடையாது. ஒரு தோல்விக்காக நீங்கள் உங்களுடைய திட்டங்களை மாற்ற வேண்டிய அவசியமும் கிடையாது. முதல் போட்டியில் பெரும்பாலான நேரங்களை இந்தியா தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனவே வெற்றிக்கு பெரிய மாற்றங்களை செய்யாமல் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது" என்று கூறினார்.