2-வது டெஸ்ட்: சுந்தர் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. 259 ரன்களில் ஆல் அவுட்

3 months ago 13

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பதிலாக கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக மேட் ஹென்ரிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னர் இடம் பிடித்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் லதாம் 15 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். அவரை தொடர்ந்து வில் யங்கையும் அஸ்வின் காலி செய்தார்.

பின்னர் கை கோர்த்த கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். இந்த கூட்டணியை அஸ்வின் உடைத்தார். கான்வே 76 ரன்களில் வீழ்ந்தார்.

இதன் பின் நியூசிலாந்து அணி வாஷிங்டன் சுந்தரின் சுழலில் மொத்தமாக வீழ்ந்தது. ரச்சின் ரவீந்திரா 65 ரன்களில் ஆட்டமிழக்க பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 7 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் கபளீகரம் செய்தார்.

முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.

Read Entire Article