![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35763083-tlwin.webp)
சென்னை,
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும். அபிஷேக் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (12 ரன்கள்), துருவ் ஜுரெல் (4 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (7 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு வழங்கிய வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களில் அக்சர் படேல் (2 ரன்கள்), அர்ஷ்தீப் சிங் (6 ரன்கள்) விரைவில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனிடையே திலக் வர்மா அரைசதத்தை கடந்தார்.
இந்திய அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஜேமி ஓவர்டான் வீசிய அந்த ஓவரில் முதல் 2 பந்துகளிலேயே 6 ரன்கள் அடித்து இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா அதிரடியாக விளையாடி 72 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.