
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவரே (61 ரன்கள்) மற்றும் சிக்கந்தர் ராசா (58 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் 49 ஓவர்கள் மட்டுமே விளையாடிய ஜிம்பாப்வே 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டுகளும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு ஒரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பால்பிர்னி 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பின் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - கர்டிஸ் கேம்பர் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
கர்டிஸ் கேம்பர் 63 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 89 ரன்களிலும் அணி வெற்றியை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டக்கர் (36 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அயர்லாந்து 249 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (18-ம் தேதி) நடைபெற உள்ளது.