![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39296153-world-02.webp)
லண்டன்,
இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாண்ட் நகரில் உள்ள ஸ்காட்ஸ் சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த மாதம் பூங்காவின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் மேலும் பல வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை 2-ம் உலகப்போரின்போது பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பூங்காவின் மற்ற இடங்களையும் தோண்டி பார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஒரு மாதமாக பூங்கா முழுவதும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 4.5 கிலோ எடை கொண்டவை என கூறப்படுகிறது.
அந்த குண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அவற்றை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர் பூங்காவில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.