2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்: குமரி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

1 month ago 4

கன்னியாகுமரி, நவ.21: கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. கடற்படை, கடலோர காவல் நிலைய போலீசார் நவீன படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை சார்பில் சீ விஜில் (Sea Vigil) என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கடலோர பகுதிகளில் சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து கடற்படையினர் நவீன ரோந்து படகில் ரோந்தில் ஈடுபட்டு கன்னியாகுமரி கடலோர பகுதிகளை கண்காணித்தனர். இது தவிர சின்னமுட்டம் மற்றும் குளச்சலில் உள்ள கடலோர காவல் நிலைய போலீசாரும், படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையிலும், மறுமுனையில் குளச்சலில் இருந்து நீரோடி வரையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு கட்டமாக கடலோர பகுதிகளில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் உள்ளிட்ட சிறப்பு பிரிவு போலீசார் மீனவ கிராமங்கள், கடலோர பகுதிகளில் உள்ள லாட்ஜுகளில் சோதனை நடத்தினர். லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடந்தது. கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகளில் இருந்தவர்களிடமும் விசாரணை நடந்தது. தேங்காப்பட்டணம், முட்டம், குளச்சல் ஆகிய இடங்களில் உள்ள கடலோர சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் 2 வது நாளாக நடக்கிறது.

The post 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்: குமரி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article