2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

1 month ago 14

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வரும் நிலையில், கடந்த 18ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் (24 தொகுதிகள் – 61.38 சதவீதம்), கடந்த 25ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் (26 தொகுதிகள் – 57.31 சதவீதம்) நடைபெற்றன. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு நாளை (செப். 30) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. முன்னதாக நேற்று மாலையுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் 40 தொகுதிகளில், 24 தொகுதிகள் ஜம்மு – பகுதியிலும், 16 தொகுதிகள் காஷ்மீர் பகுதியிலும் உள்ளன.

இறுதிக் கட்டத் தேர்தலில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி-தோல்வியை 39.18 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர், அவர்களின் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினர்.

இவர்களது பிரசாரத்தில், 370வது சட்டப் பிரிவு நீக்கம், தீவிரவாதம், அமைதி, இடஒதுக்கீடு, பாகிஸ்தான் போன்ற விவகாரங்கள் முக்கிய இடம் பெற்றன. ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டிக் களத்தில் உள்ளன. வரும் அக்டோபர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் ஜம்மு – காஷ்மீரில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெரிந்துவிடும்.

 

The post 2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article