18 பேரை பலிகொண்ட டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்

1 week ago 3

டெல்லி,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ரெயில் நிலையத்தின் 12 முதல் 16 வரையிலான நடைமேடையில் நேற்று இரவு அதிக அளவு பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, கும்பமேளா நடைபெறும் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு இந்த நடைமேடைகளில் ரெயில்கள் வரவிருந்தது.

14வது நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.10 மணியளவில் புறப்பட காத்திருந்தது. அந்த ரெயிலில் ஏற ஏராளமான பயணிகள் குவிந்தனர். அதேவேளை, 12,13, 15 ஆகிய 3 நடைமேடைகளுக்கு வரவேண்டிய பிரயாக்ராஜ் வழியாக செல்லும் ரெயில்கள் வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

அதே சமயத்தில் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் சிறப்பு ரெயில் நடைமேடை 16க்கு வருவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், 14வது நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிக்கொண்டிருந்த பயணிகள் இந்த ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லாது என தவறுதலாக நினைத்துள்ளனர்.

16வது நடைமேடைக்குத்தான் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதாக நினைத்துள்ளனர். ஆனால், 16வது நடைமேடைக்கு பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் வருவதாக அறிவிப்பு வெளியானது.

சிறப்பு ரெயிலுக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் பிரயாக்ராஜ் என ஒரேபெயர் இருந்ததால் குழப்பமடைந்த பயணிகள் 14வது நடைமேடையில் இருந்து 16வது நடைமேடைக்கு செல்ல குவிந்துள்ளனர்.

பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளுடன் 14வது நடைமேடையில் இருந்து 15வது நடைமேடை வழியாக 16வது நடைமேடைக்கு செல்ல முயற்சித்துள்ளனர். 14 மற்றும் 15வது நடைமேடைக்கு இடையே உள்ள நடைமேடை மேம்பாலத்தில் (நடைமேடை படிக்கட்டு - footover bridge) நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் ஏற முயன்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பயணிகள் பலரும் கீழே விழுந்தனர். கீழே விழுந்த பயணிகள் மீது மற்ற பயணிகள் ஏறி நடந்துள்ளனர்.

இதில் இடுப்பு எழும்பு முறிவு, மூச்சுத்திணறல், கால் முறிவு உள்ளிட்ட காரணங்களால் 18 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த கூட்ட நெரிசலில் பலர் படுகாயமடைந்தனர். அதேபோல், ரெயிலில் ஏற முயற்சித்தபோதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேவேளை, டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரெயில்வே தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2.50 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

Read Entire Article