
மும்பை,
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, ஷேன் வாட்சனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வாட்சன் 107 ரன்களும், கிறிஸ்டியன் 32 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆஷ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன கிறிஸ் கெயில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் 220 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிம்மன்ஸ் 94 ரன்களும், டுவைன் சுமித் 51 ரன்களும், பிரையன் லாரா 33 ரன்களும், சாட்விக் வால்டன் 23 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர்.