தென் தமிழக மக்களின் 17 ஆண்டு கனவான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம் நிறைவடைந்து வரும் 7ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகப்படியான மழைப்பொழிவால் கிடைக்கும் வெள்ள நீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நிலையே தற்போது வரை உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி – கருமேனியாறு- நம்பியாறு ஆகியவற்றை இணைக்கும் வகையில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளை வளமாக்கும் வகையில் ரூ. 369 கோடியில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கடந்த 2008ம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3வது) அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை கடந்த 2009 பிப்ரவரி 21ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடு ரூ. 1,060.76 கோடிக்கு கடந்தாண்டு மார்ச் 2ம் தேதி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் ரூ. 872.45 கோடிக்கு முதலீட்டு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 2,645.40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மொத்தம் 4 நிலைகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், 3 நிலைகளில் 100 சதவீத பணிகள் கடந்தாண்டு முடிந்துவிட்டன. எஞ்சியிருந்த 4வது நிலை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளாங்குழி கிராமம் அருகே கன்னடியன் கால்வாயில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் எம்.எல்.தேரிவரை, விநாடிக்கு 3,200 கனஅடி வீதம் வெள்ளநீரை கொண்டு செல்லும் வகையில் 75.2 கி.மீ. நீளத்துக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எம்.எல்.தேரி குளம் அருகே சுமார் 1.5 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அதன்படி கன்னடியன் கால்வாயின் பெரும்பகுதி பணிகள் முடிந்துவிட்டதால், 2023ம் ஆண்டு டிசம்பரில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது டிச.17, 18ம் தேதிகளில் கன்னடியன் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீரை திருப்பிவிட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 2 வாரம் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தின்போது, கால்வாயில் 42 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.
திசையன்விளை வரை கால்வாயில் தண்ணீர் சென்றதால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. உடைப்பு ஏற்பட்ட இடங்களை சரிசெய்து மீண்டும் சோதனை ஓட்டம் நடப்பட்டது. உடைப்புகளை சரிசெய்யும் பணிகள் முடிவடைந்ததும் கன்னடியன் கால்வாய் வழியாக வெள்ளநீரை குளங்களுக்கு கொண்டு செல்லும் பணி சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. தென் தமிழக மக்களின் 17 ஆண்டு கனவான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது. இதனை வரும் 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
56 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
* தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கிமீ மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கிமீ என மொத்தம் 75.2 கிமீ நீளத்திற்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த திட்டம் மூலம் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் என மொத்தம் 56,933 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 117 குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்கள் முழுமையாக பயன்
பெறும்.
* திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் பயன்பெறும்.
The post 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்தமிழக மக்களின் கனவு திட்டமான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் நிறைவு appeared first on Dinakaran.