பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் தூதராக நடிகர் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக திரைப்பட அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்திவருகிறது. அந்தவகையில், 16வது (2024-2025) பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு மற்றும் மையக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழாவின் தொடக்க விழா மார்ச் 1ம் தேதியும் நிறைவு விழா மார்ச் 8ம் தேதியும் நடைபெறும். இந்த திரைப்பட விழா குறித்து கூடுதல் விளம்பரத்திற்காக இந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற நடிகர் கிஷோர் குமார் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் தூதராக நடிகர் கிஷோர் குமாரை நியமித்து மாநில அரசு நேற்று ஆணை பிறப்பித்தது. பெங்களூருவில் 8 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, திரைப்படத் துறைக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
The post 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நடிகர் கிஷோர் தூதராக நியமனம் appeared first on Dinakaran.