முல்தான்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் 152 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. முல்தான் கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 366 ரன், இங்கிலாந்து 291 ரன் குவித்தன. 75 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சல்மான் ஆஹா அதிகபட்சமாக 63 ரன் எடுத்தார். ஷகீல் 31, கம்ரான் குலாம் 26, ரிஸ்வான் 23, அயூப், சஜித் கான் தலா 22 ரன் எடுத்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷிர் 4, ஜாக் லீச் 3, பிரைடன் கார்ஸ் 2, மேத்யூ பாட்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 33.3 ஓவரில் 144 ரன் மட்டுமே எடுத்து 152 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37, கார்ஸ் 27, போப் 22, ரூட் 18, புரூக் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர். பாட்ஸ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் 38 வயது இடது கை ஸ்பின்னர் நோமன் அலி 16.3 ஓவரில் 1 மெய்டன் உள்பட 46 ரன்னுக்கு விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். சஜித் கான் 2 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 7 விக்கெட் வீழ்த்திய சஜித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடந்த 52 ஆண்டுகளில் எதிரணியின் 20 விக்கெட்டையும் இரண்டே பவுலர்கள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும் (நோமன் 11, சஜித் 9). டெஸ்ட் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் 7வது பந்துவீச்சு கூட்டணி என்ற பெருமை நோமன் – சஜித்துக்கு கிடைத்துள்ளது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் அக்.24ல் தொடங்குகிறது.
The post 152 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி: நோமன் அலி 8 விக்கெட் appeared first on Dinakaran.