நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்புத்தேடி உதகைக்கு இடம் பெயர்ந்தனர். அங்குள்ள கிராமம் ஒன்றில் தங்கி இருந்து கிடைக்கின்ற கூலி வேலை களை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தது. தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி கடந்த 10 ந்தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தோழிகளை பார்க்க சென்றவர் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அந்த மாணவியை தேடி வந்த நிலையில் 13 ந்தேதி அவர் வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. செல்போனுக்கு அடிமையாகி முகநூல் இன்ஸ்டாகிராம் என்று மூழ்கிக்கிடந்த சிறுமிக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலன் காஜாவை நேரில் சந்திக்கும் ஆவலில் மேட்டுப்பாளையம் சென்ற தன்னை அவர் தனி அறையில் அடைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து காஜாவை பிடித்து விசாரித்த போது அந்த சிறுமி ஏற்கனவே பலருடன் நெருங்கி பழகியவர் என்று கூறியுள்ளார். விரிவான விசாரணையில் தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகி வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக மேலும் 6 இளைஞர்களின் பெயரை சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் மேட்டுப்பாளையம் காஜா, தொட்டபெட்டா சரக்கு வாகன ஓட்டுனர் யுவராஜ் என்கிற ஹரிஷ் , பெந்தட்டி பிரேம்குமார், இடுஹட்டி பிரவீன், சாந்தூர் அஜித் உட்பட ஏழு பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஹரிஷ், பிரவீன், பிரேம்குமார், அஜித் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் உதகை ரூரல் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் குடும்பத்தின் வறுமை, பெற்றோர் அரவணைப்பில்லாததால் படிப்பில் கவனமின்றி, செல்போன் சாட்டிங்கில் மூழ்கியதாக அந்த சிறுமி தெரிவித்தார். தனது வாழ்க்கையை பாதையில் இருந்து திசைமாறிச்சென்ற அந்த மாணவிக்கும் , பெற்றோருக்கும் போலீசார் தகுந்த புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர்.