15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி தகவல்

3 weeks ago 3

சென்னை: சென்னை மாநகராட்சியில் டிசம்பர் 2009 வரை பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பவர்கள், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பித்து, பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு/ இறப்பு பதிவு சட்டம் மற்றும் பிறப்பு இறப்பு பதிவு திருத்த சட்டம் வழிவகை செய்கிறது.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும். ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்துக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு / இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம்.
12 மாதங்களுக்கு பின்னர் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி பதிவு செய்திட பிறப்பு/ இறப்பு பதிவு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகளின் படி, 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த கால அளவு முடிந்த பின்னரும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவற்ற நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.

எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைந்திட பிறப்பு பதிவு செய்து, 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சி பிறப்பு/ இறப்பு பதிவு அலுவலகம், மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்ய கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாதவர்கள் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article