15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

2 months ago 18

காலே: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு நியூசிலாந்து அணி சறுக்கியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் காலேயில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இலங்கை அணி களமிறங்கியது. இலங்கையின் அணியின் வீரர் கமிண்டு மெண்டிஸ் 182 ரன்களையும், தினேஷ் சந்திமால் 116 ரன்களையும், குசல் மெண்டிஸ் 106 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இறுதியில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்களை குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 88 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சாண்டனர் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பிரபாத் ஜெயசூரிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 514 ரன்கள் பின் தங்கிய நியூசிலாந்த அணி ஃபாலோஆன் பெற்று மீண்டும் 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர்கள் சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வில்லியம்சன் 46 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 78 ரன்கள், டாம் பிளண்டல் 60 ரன்களும், மிச்சல் சான்ட்நர் 67 ரன்கள் எடுத்தனர். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி 81.4 ஓவர்கள் எதிர்கொண்டு 360 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. இலங்கை அணியின் நிஷான் பெர்ரிஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 55-வது சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் 7 வெற்றி புள்ளிகள் வித்தியாசமாக உள்ளது. இலங்கை அணி எஞ்சிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோத அதிக வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி appeared first on Dinakaran.

Read Entire Article