
காங்டாக்,
சிக்கிம் மாநிலம் யல்ஷிங் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவியருக்கு குழந்தைகள் நல ஆணையம் சார்பில் கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது, அப்பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மிகவும் சோர்வாகவும் காணப்பட்டார். இதையடுத்து, பள்ளி ஆசிரியைகள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது, தன்னை சிலர் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைகள், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி அப்பகுதியில் உள்ள வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு அந்த நபரின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
பின்னர், அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த மேலும் 2 பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். மேலும், அதேபகுதியை சேர்ந்த 4 சிறுவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளர். சுமார் ஓராண்டாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.