13 பேர் பலியான சம்பவம்,: 'விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படை தான்' - படகின் உரிமையாளர் பரபரப்பு பேட்டி

4 months ago 17

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு 'நீல் கமல்' என்ற பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகு மீது மோதியது. இந்த கோர விபத்தில் பயணிகள் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். உடனடியாக விரைந்து வந்த கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் துரதிஷ்ட வசமாக 13 பேர் உயிரிழந்தனர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். அதன்படி, படகு விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேவேளை, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்து 'நீல்கமல்' படகின் உரிமையாளர் கூறுகையில், "கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகு தான் எனது படகை சேதப்படுத்தியது. இதன் காரணமாக தான் எனது படகு கடலில் மூழ்கியது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடலில் மூழ்கிய எனது படகில் எந்தவொரு பழுதும் கிடையாது. விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகு தான். எனது படகில் ஜே.என்.பி.டி. துறைமுகம், உரண், எலிபெண்டா தீவு போன்ற இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறேன். ஆகவே படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.    

Read Entire Article