தஞ்சாவூர்: காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வன்மம் தீராமல் 13 ஆண்டுகள் கழித்து அக்காவின் கணவரை அரிவாளால் வெட்டிய மைத்துனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி(32). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி(28). இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சொந்த ஊரை விட்டு வெளியேறி திருவோணம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கலியமூர்த்தியும், மகாலட்சுமியும் எட்டுபுளிக்காட்டில் உள்ள மகாலட்சுமியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்த நிலையில் அடிக்கடி கலியமூர்த்திக்கும் மகாலட்சுமியின் தம்பி முருகானந்தத்திற்கும்(25) தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கலியமூர்த்தி மகனுடன் வெளியே சென்ற போது, முருகானந்தத்திற்கும் கலியமூர்த்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, முருகானந்தம் உறவினர்களான செந்தில்குமார்(32), வீரமுத்து(34) ஆகியோரை வரவழைத்து, மூவரும் சேர்ந்து கலியமூர்த்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் ஒன்பது இடங்களில் வெட்டுக் காயமடைந்த கலியமூர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து முருகானந்தம், செந்தில்குமார் ஆகிய இருவரையும் நேற்று காலை கைது செய்தனர். வீரமுத்துவை தேடி வருகின்றனர். இதுகுறித்து கலியமூர்த்தி மனைவி மகாலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், ‘நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். நான் வசதியான வீட்டு பெண். எனது கணவர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம். 13 ஆண்டுகளாக பகையை வைத்து கொண்டு கணவரை எனது சகோதரர் வெட்டியுள்ளார். வெட்டியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.
The post 13 ஆண்டுகளாக தீராத பகை அக்காவை காதல் திருமணம் செய்தவரை பழி தீர்த்த தம்பி: 9 இடங்களில் சரமாரி வெட்டு appeared first on Dinakaran.