தலைப்பைப் படிக்கும்போதே எங்கு என்று கேள்வி எழுகிறது அல்லவா? திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே உள்ள பழைய ஆயக்குடி எனும் கிராமத்தில், கவிதா எனும் பெண் விவசாயியின் வயலில்தான் இத்தனை நெல் ரகங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள பழனியில் உள்ள கவிதாவின் விவசாய வயலுக்கு விரைந்தோம். தனது பத்து ஏக்கர் வயலை சுற்றிக்காண்பித்த கவிதா, அவரைப் பற்றியும் அவரது இயற்கை விவசாய முறையைப் பற்றியும் பேசத் தொடங்கினார். “ நான் படித்தது சிவில் இஞ்சினியரிங். ஆனால் ஆர்வம் எல்லாம் விவசாயம் மீதுதான். அதனால்தான் இஞ்சினியரிங் படித்தும்கூட விவசாயத்தையே விரும்பி செய்கிறேன். தாத்தா காலத்தில் நெல், கரும்பு, சோளம் என பல வகையான விவசாயம் செய்வாங்க. அப்போதெல்லாம், தாத்தாவோட தோட்டத்திற்கு போனதோட சரி. விவசாயம் சார்ந்து எந்த புரிதலும் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால், வளர வளர உணவு சார்ந்தும் விளைவிக்கப்படுகிற உணவுப் பொருட்கள் சார்ந்தும் அக்கறை வரத் தொடங்கியது. அதனால், கல்லூரி படித்து முடித்தவுடனேயே சிறிய அளவில் காய்கறித் தோட்டம் வைக்கத் தொடங்கினேன். இப்படித்தான் எனது விவசாயப் பயணம் தொடங்கியது. காய்கறிகள் நல்ல முறையில் காய்த்தாலும் ரசாயன முறையில் சாகுபடி செய்ததால், உணவுப் பொருட்களில் ருசியோ ஆரோக்கியமோ இல்லாமல் இருப்பது தெரியவந்தது. நான் விளைவித்து நான் சாப்பிடும் உணவுகளே இப்படி இருக்கும்போது எங்கோ விளைந்து யாரோ சாப்பிடும் உணவுப் பொருட்கள் எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும் என யோசித்தேன். அதனால், என்னளவில் நான் விளைவிக்கும் பொருட்கள், நான் விற்பனை செய்யும் பொருட்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன். அப்படியே நமது பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அறிந்து அவற்றையும் தேடித்தேடி பயிர் செய்ய ஆரம்பித்தேன்.
சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு தூயமல்லி நெல்லை விதைத்து எனது பாரம்பரிய நெல்சாகுபடியைத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கும் மேலான பாரம்பரிய ரகங்களைப் பயிர் செய்கிறேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால் எட்டு ஏக்கரில் தூயமல்லி, காட்டுயானம், பூங்கார், கருப்புக் கவுனி விதைத்திருக்கிறேன். மீதமிருக்கிற இரண்டு ஏக்கரில் 123 வகையான பாரம்பரிய ரகங்களை சிறிது சிறிதாக விதைத்திருக்கிறேன். இந்த ரகங்கள் அனைத்தும் தமிழகமெங்கும் நடக்கும் விதைத்திருவிழா போன்ற விவசாயம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு நானே சேகரித்தவை. இத்தனை ரகங்கள் பயிரிட்டதற்கான நோக்கமே அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து மீண்டும் விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஒரு ஏக்கர் நிலத்திற்கு சராசரியாக 4 கிலோ விதை நெல் தேவைப்படும். அதனால் இத்தனை வகையான ரகங்களையும் சோதனை முறையில் பயிரிட்டு விதைநெல் எடுத்து எல்லா விவசாயிகளுக்கும் வழங்க இருக்கிறேன்.
இயற்கை முறை விவசாயம் பாரம் பரிய விதை பயிரிடலில் சரியான மகசூல் வர வேண்டுமென்றால் அதற்கு முதலில் மண்ணை இயற்கை விவசாயத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும். செயற்கை உரங்களால் மலட்டுநிலமாக இருந்த எனது நிலத்தை இயற்கை உரத்திற்கு பக்குவப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். பாரம்பரிய ரகங்களை சரியான பட்டங்களில் விதைப்பது அவசியம். இல்லையென்றால் மகசூல் மிகவும் பாதிக்கும். நிலத்தை பக்குவப்படுத்த 5,6 முறை நன்றாக உழுது, தொழுஉரமிட்டு, மீண்டும் உழ வேண்டும். அதன்பின் நாற்று நட வேண்டும். அடுத்தடுத்த விதைப்பு களில் தக்கைப்பூண்டு விதைத்து அதனை மடக்கி உழுது அதில் விதைக்க வேண்டும். இப்படி சிறிதுசிறிதாக மண்ணை மேம்படுத்த வேண்டும். அதேபோல், பயிர்களுக்கு இயற்கை முறையில் தயார் செய்த ஜீவாமிர்தம், அமிர்தக்கரைசல் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பூச்சிக்கொல்லிக்கு பதிலாக பூச்சி விரட்டியைப் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக மண்ணையும் பயிரையும் இயற்கை முறைக்கு பழக்கப்படுத்தினால்தான் அந்த விவசாயம் முழுமையான இயற்கை விவசாயமாக இருக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
கவிதா: 92453 93394
இயற்கை விவசாயம் செய்யும்போது வயலில் பூச்சிகள், குருவிகள், மயில்கள் போன்றவை வருவதைப் பார்க்கலாம். ஆனால், ரசாயன விவசாயம் செய்யும்போது இந்தக் குருவிகளை காண முடிவதில்லை. குருவிகள் கூட சாப்பிடாத அரிசிகளை மக்கள் சாப்பிடுவதை நினைத்துதான் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன்.
8 ஏக்கரில் 4 வகையான பாரம்பரிய ரகங்களை பயிரிட்டிருக்கும் கவிதா, 1 ஏக்கரில் இருந்து ஒன்றரை டன் நெல்லை உற்பத்தியாக எடுக்கிறார். முதன்முதலில் இயற்கை விவசாயம் செய்யும்போது ஏக்கருக்கு 300 கிலோ மகசூல்தான் கிடைத்திருக்கிறது. சிறிது சிறிதாக மண்ணை இயற்கை முறைக்கு பழக்கப்படுத்தி இந்தளவு மகசூலை எட்டிப்பிடித்திருக்கிறார். இந்த மகசூல் மிகவும் குறைவுதான் என்றாலும் வருமானத்திற்காக இந்த விவசாயம் செய்யவில்லை எனும்போது மகிழ்ச்சிதான் என்கிறார்.
The post 123 பாரம்பரிய நெல் ரகங்கள்… appeared first on Dinakaran.