12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்பதில் என்ன தவறு..? - இந்திய தலைமை பயிற்சியாளர் கேள்வி

2 months ago 13

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது. அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒரு தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மட்டும் காரணம் என்று சொல்ல விரும்பவில்லை என தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். அத்துடன் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்பதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் இது போன்ற தோல்விகள்தான் இளம் வீரர்களை வலுவாக்கி வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட வைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு:- "அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் மட்டும் எங்களை கீழே விட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இந்த தோல்வி வலிக்கிறது என்று சொல்லி நான் மூடி மறைக்க விரும்பவில்லை. இது எங்களுக்கு வலிக்க வேண்டும். அந்த வலிதான் எங்களை இன்னும் சிறந்தவர்களாக மாற்றும். இந்த இடத்தில் இருப்பதில் என்ன தவறு? இது எங்களுடைய இளம் வீரர்களை இன்னும் சிறப்பாக முன்னேறுவதற்கு தள்ளும். கான்பூரில் வங்காளதேசத்துக்கு எதிராக அற்புதமான வெற்றியை பெற்ற எங்களுக்கு இது போன்ற தோல்வியும் கிடைக்கலாம். நாங்கள் அதிலிருந்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரவில்லை. முதலில் இலங்கையிடம் தோற்ற நாங்கள் தற்போது நியூசிலாந்திடம் தோற்றுள்ளோம். ஆனால் தொடர்ந்து தயாராகி நாட்டுக்காக சிறந்த முறையில் விளையாட நாங்கள் முயற்சிக்க உள்ளோம். டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வருகையால் இப்போதெல்லாம் டிராவை நம்மால் அதிகம் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது" என்று கூறினார்.

Read Entire Article