
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த தொழிலாளி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 11 வயதான முதல் மகள், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் பெற்றோர் வேலை விஷயமாக அவ்வப்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்று, அங்கு தங்கியிருந்து பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வருவார்கள்.
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி சிறுமியின் பெற்றோர் சொந்த வேலை காரணமாக சத்தியமங்கலம் சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமிகள் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது தம்பதியின் 2-வது மகள் அருகில் உள்ள மளிகை கடைக்கு நூடுல்ஸ் வாங்க சென்றாள்.
வீட்டில் 11 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார் சோனி குதுரா (வயது 22) என்பவர், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ஏற்கனவே அவர் சிறுமிக்கு 'ஐ லவ் யூ' என்று செல்போன் மூலம் குறுஞ்செய்தியை காண்பித்து தொந்தரவு செய்து உள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முகேஷ்குமார் சோனி குதுராவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.