சென்னை: 1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆதாவது;
1. கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழை எளிய, நடுத்தர மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்தம் பொருளாதார மேம்பாட்டிற்கென நாட்டிலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை நூறாண்டுகளுக்கும் மேலாக நமது கூட்டுறவு சங்கங்கள் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றன. மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏதுவாக, அனைத்து வகைக் கூட்டுறவுச் சங்கங்களும் நடப்பிலுள்ள பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்நிதியாண்டில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன் உதவி வழங்கும்.
2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறுவதற்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அக்கடனைப் பெறும் நடைமுறையே தற்பொழுது இருந்து வருகிறது. இந்நடைமுறையில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இணையவழியில் (Online) பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் நடைமுறையும், விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடனை நேரடியாக வழங்கும் நடைமுறையும் தருமபுரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக (Pilot) செயல்படுத்தப்பட்டு, பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
3. நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூபாய் ஐந்து இலட்சம் வரை கடன் வழங்கப்படும். வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்தம் பெயரில் இரண்டு ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும்.
4. விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகக் கடனுதவி வழங்கப்படும். விவசாயிகள் தமது விளைபொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாக விவசாய உற்பத்திக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLG) என அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு இது தொடர்பான கடன்கள் வழங்கப்படும்.
5. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரம் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய 1000 மகளிருக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ (e-Auto) கொள்முதல் செய்வதற்குக் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக தலா ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
6. நட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் “உறுப்பினர் ஆதரவு திட்டத்தின்” கீழ் இலாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றப்படும். 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு நட்டம் மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சுமார் 950 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் “உறுப்பினர் ஆதரவுத் திட்டத்தின்” கீழ் (Member Support Programme) தாய் சங்கங்களான மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றும், நிபந்தனைகளை எளிதாக்கப்பட்டு வைப்புகள் சேகரித்தும் 31.03.2026-க்குள் இலாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றப்படும்.
7. கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இணைய வழி சேமிப்புக் கணக்கு தொடங்குதல், கடன் அட்டை வழங்குதல், கைபேசி வங்கிச் சேவை முதலிய சேவைகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கவும், கால தாமதத்தைத் தவிர்க்கவும், இதர வணிக வங்கிகளைப் போல இணைய வழியில் சேமிப்புக் கணக்கு தொடங்குதல், பல்வேறு வகையான கடன்களை இணைய வழியில் பெறுதல், கைபேசி வங்கிச் சேவை (Mobile Banking), கடன் அட்டை (Credit Card) போன்ற வங்கிச் சேவைகள் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்கப்படும்.
8. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் அனைத்துக் கிளைகளிலும் தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். வாடிக்கையாளர்களின் பெருகி வரும் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் தேவையின் அடிப்படையில் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணாநகர் கிளை, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிளை, கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகக்கிளை, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழங்காநத்தம் கிளை, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரிவலம்வந்தநல்லூர் கிளை மற்றும் வேங்கடேஸ்வராபுரம் கிளை, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓசூர் கிளை ஆகிய 7 கிளைகளில் கூடுதல் தனிநபர் பாதுகாப்புப் பெட்டக வசதி ஏற்படுத்தப்படும்.
9. மாத்தூர், புழுதிவாக்கம், திருநாகேஸ்வரம், சாலியமங்கலம், செக்கானூரணி, தென்னிலை ஆகிய இடங்களில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் தொடங்கப்படும். வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கிட ஏதுவாக சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மாத்தூர் மற்றும் புழுதிவாக்கம் ஆகிய இடங்களிலும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் திருநாகேஸ்வரம் மற்றும் சாலியமங்கலம் ஆகிய இடங்களிலும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செக்கானூரணியிலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை கரூர் மாவட்டம் தென்னிலையிலும் தொடங்கப்படும்.
10. வசிப்பிடத்திற்கு அருகிலேயே விவசாயிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்கிட ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் தொடங்கப்படும். அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு வானதிரையன்பட்டினம்; பரணம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு இரும்புலிக்குறிச்சி; ஈரோடு மாவட்டம் கொடுமுடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு சாலைப்புதூர்; இராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு கூடலூர், மாம்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு வாழைப்பந்தல் ஆகிய ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் புதிதாகத் தொடங்கப்படும்.
11. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை புஞ்சை புளியம்பட்டியில் தொடங்கப்படும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகச் செயல்பட்டு மக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத் திற்குப் பெரிதும் காரணமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்த வங்கியின் சேவை அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதி மக்களுக்கும் சென்றடைய ஏதுவாக சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியின் புதிய கிளை புஞ்சைபுளியம்பட்டியில் தொடங்கப்படும்.
12. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நகர கூட்டுறவுக் கடன் சங்கத்தின் புதிய கிளை ஈஞ்சம்பள்ளியில் தொடங்கப்படும். 1958ஆம் ஆண்டு தொடங்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு அண்மையில் நகர கூட்டுறவுக் கடன் சங்கமாக மாற்றம் செய்யப்பட்ட மொடக்குறிச்சி சங்கத்தின் கிளை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஈஞ்சம்பள்ளியில் தொடங்கப்படும்.
13. விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, மதிப்புக் கூட்டி தரமான எண்ணெயைக் குறைவான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏதுவாக நான்கு எண்ணெய் உற்பத்தி அலகுகள் ரூபாய் ஐம்பத்தி மூன்று இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
14. ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தொன்பது இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் அலகுகள் புதிதாக அமைக்கப்படும்.
15. ரூபாய் எழுபது இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து பெறும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வண்ணம் இரண்டு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும்
16. விரைவு வணிகம் (Quick Commerce) வாயிலாக நுகர்வுப் பொருட்கள் பொதுமக்களின் வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் நுகர்வுப் பொருட்களை கூட்டுறவுப் பண்டகசாலைகள் தரமாகவும் நியாயமான விலையிலும் விற்பனை செய்து வருகின்றன. இந்நுகர்வுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகம் செய்யும் வகையில் விரைவு வணிக முறை செயல்படுத்தப்படும்.
17. ரூபாய் இருபத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கடலூர் மண்டல அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும். உணவு உற்பத்திக்குத் தேவையான உரம், விதை மற்றும் இதர இடுபொருட்களை சிறப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கி வரும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் கடலூர் மண்டல அலுவலகத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
18. ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு இலட்சம் மதிப்பீட்டில் நீலகிரி, மயிலாடுதுறை, விருத்தாசலம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும். நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளையில் புதிய சிமெண்ட் சாலை ரூ. 150 லட்சம் மதிப்பீட்டிலும், மயிலாடுதுறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலக கட்டடம் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், விருத்தாசலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலகக் கட்டடம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலும், திருவெண்ணெய்நல்லூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பாதுகாப்புப் பெட்டகம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜவ்வாது மலை பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டகம் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும்.
19. ரூபாய் எட்டு கோடியே அறுபத்து ஒன்பது இலட்சம் மதிப்பீட்டில் ஆரணி, செய்யாறு, உடுமலைப்பேட்டை, உத்தமபாளையம், விழுப்புரம் மற்றும் வாடிப்பட்டி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் புதிய பல்நோக்கு சேவை மையங்கள் கட்டப்படும். ஆரணி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வணிக வளாகம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும், செய்யாறு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வணிக வளாகம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், திருப்பூர் மாவட்டம் அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வணிக வளாகம் ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டிலும், விழுப்புரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வணிக வளாகம் ரூ.1.75 கோடி மதிப்பிட்டிலும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வியாபார சேவை மைய கட்டடம் ரூ. 18 இலட்சம் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பல்நோக்கு சேவை மையம் ரூ. 120 இலட்சம் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பல்நோக்கு சேவை மையம் ரூ. 406 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.8.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
20. ரூபாய் இருபத்தைந்து கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மாதவரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிறுவனத்தில் (ACSTI) புதிய வகுப்பறைக் கட்டடங்கள் ரூ.16 கோடி மதிப்பீட்டிலும், இலால்குடி தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சுற்றுச்சுவர் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டிலும், சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்குச் சுற்றுச்சுவர் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்குப் புதிய கட்டடம் ரூ.2 கோடி மதிப்பீட்டிலும், திருப்பூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்குப் புதிய கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், இராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
21. ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) அமைக்கப்படும். நவீன தொழில்நுட்பங்களை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் வண்ணம் சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் (Smart class rooms) அமைக்கப்படும்.
22. ரூபாய் ஆறு கோடியே இருபத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பத்து கிளைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இளையான்குடி கிளை ரூ.45 இலட்சம் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிணத்துக்கடவு கிளை ரூ.80 லட்சம் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய 3 கிளைகள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஆகிய 2 கிளைகள் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் விளாத்திக்குளம் மற்றும் கழுகுமலை ஆகிய 2 கிளைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வானூர் கிளை ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் என 10 கிளைகளுக்குப் புதிய கட்டடங்கள் மொத்தம் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
23. ரூபாய் பதினேழு கோடி மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். ஊரகப் பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், சங்கங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், சேவைகளை விரிவுபடுத்தவும் இருபத்தாறு மாவட்டங்களிலுள்ள 57 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு ரூ.17 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடங்கள், சுற்றுச்சுவர், பல்நோக்கு கூட்ட அரங்கம் என புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
24. ரூபாய் ஒரு கோடியே பத்து இலட்சம் மதிப்பீட்டில் சிங்கம்புணரி, சிதம்பரம், கம்பம் மற்றும் பெரியகுளம் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். சிங்கம்புணரி தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், சிதம்பரம் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும், கம்பம் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், பெரியகுளம் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
25. ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் தியாகராயநகர், மேட்டுப்பாளையம் மற்றும் கருந்தட்டாங்குடி திராவிட நகர கூட்டுறவு வங்கிகளுக்கு மொத்தம் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும். நகர்ப்புற மக்களின் அத்தியாவசிய நிதி தேவைகளை பூர்த்தி செய்து வரும் சென்னை தியாகராயநகர் நகர கூட்டுறவு வங்கிக்கு ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரக் கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 இலட்சம் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடி திராவிட நகர கூட்டுறவு வங்கிக்கு ரூ.65 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ஒரு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.
26. ரூபாய் முப்பது இலட்சம் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டடம் கட்டப்படும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வரும் காட்டுமன்னார்கோவில் நகர கூட்டுறவுக் கடன் சங்கத்திற்கு புதிய அலுவலக கட்டடம் ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
27. ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கிடங்குகள் கட்டப்படும். தற்போது வாடகை கட்டடத்தில் செயல்பட்டுவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலைக்கு புதிய அலுவலக கட்டடம் மற்றும் நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும், தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு நுகர்பொருள் சேமிப்புக்கிடங்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
28. ரூபாய் இரண்டு கோடியே இருபது இலட்சம் மதிப்பீட்டில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமாக எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகங்கள் கட்டப்படும். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகங்கள், எழும்பூரில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டிலும், கீழ்ப்பாக்கத்தில் ரூ. 70 இலட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் இரண்டு கோடியே இருபது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
29. ரூபாய் ஒரு கோடியே எழுபத்து ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா நகர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கொடுங்கையூர் பகுதியில் கிடங்கு மற்றும் சுய சேவைப் பிரிவுடன் கூடிய கூட்டுறவு வளாகம் கட்டப்படும். பூங்கா நகர் மொத்த விற்பனை பண்டகசாலை நுகர்வோருக்கு தரமான பொருட்களை குறைவான விலையில் வழங்கி தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கொடுங்கையூர் பகுதியில் கிடங்கு மற்றும் சுய சேவைப் பிரிவுடன் கூடிய கூட்டுறவு வளாகம் ஒரு கோடியே எழுபத்து ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
30. ரூபாய் இருபத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் வட்டம் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய மற்றும் கடன் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும். உறுப்பினர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிடும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் வட்டம் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய மற்றும் கடன் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
31. ரூபாய் மூன்று கோடியே முப்பத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் நவீனமயமாக்கப்படும். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் ரூ.265 இலட்சம் மதிப்பீட்டிலும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆகிய 3 மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைமையகங்கள் மொத்தம் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
32. ரூபாய் மூன்று கோடியே எழுபது இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் நவீனமயமாக்கப்படும். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதுவயல், மதகுப்பட்டி, ராம்நகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கிளை ஆகிய 4 கிளைகள் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகக் கிளை ரூ.1.10 கோடி மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பென்னாடம் கிளை ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மணப்பாறை கிளை ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சங்கராபுரம் கிளை ரூ.1 கோடி மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், கடம்பூர், சாத்தான்குளம் ஆகிய 3 கிளைகள் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம், ஆம்பூர், கலவை ஆகிய 3 கிளைகள் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 14 கிளைகள் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
33. ரூபாய் ஏழு கோடியே ஐம்பது இலட்சம் மதிப்பீட்டில் ஐம்பது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் 21 மாவட்டங்களில் உள்ள 50 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் ஏழு கோடியே ஐம்பது இலட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
34. ரூபாய் இரண்டு கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், சின்னக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் போளூர் நகர கூட்டுறவு வங்கிகள் நவீனமயமாக்கப்படும். நகர்ப்புற மக்களின் நிதித் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து வரும் நகர கூட்டுறவு வங்கிகள் புதுப்பொலிவுடன் செயல்பட கோயம்புத்தூர் நகர கூட்டுறவு வங்கி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர கூட்டுறவு வங்கி ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் மாவட்டம் சின்னக் காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி ரூ.48 லட்சம் மதிப்பீட்டிலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர கூட்டுறவு வங்கி ரூ.37 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 6 வங்கிகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
35. ரூபாய் இருபத்தைந்து இலட்சம் மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் மற்றும் செனூர் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும். வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு நிதிசார் சேவைகளை விரைந்து வழங்கவும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நவீன வசதிகளை உருவாக்கவும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம் செனூர் நகர கூட்டுறவுக் கடன் சங்கம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலும் நவீனமயமாக்கப்படும்.
36. ரூபாய் பதினைந்து இலட்சம் மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நவீனமயமாக்கப்படும். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையினை வழங்கிடவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் காடையாம்பட்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
37. ரூபாய் ஐம்பது லட்சம் மதிப்பீட்டில் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அலுவலகக் கட்டடம் மற்றும் கிடங்கு நவீனமயமாக்கப்படும். பொதுமக்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கி வரும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் அலுவலகக் கட்டடம் மற்றும் கிடங்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
38. ரூபாய் நாற்பது லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கோயம்பேடு குளிர்பதனக் கிடங்கு பொலிவூட்டப்படும். வேளாண் விற்பனைச் சங்கங்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைமை அலுவலகம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொலிவூட்டப்படும். வேளாண் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதுடன் அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்களைக் குறைக்கவும் விளைபொருட்கள் விநியோகத்தின் ஒட்டுமொத்த செயல் திறனை மேம்படுத்தவும் கோயம்பேடு குளிர்பதனக் கிடங்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொலிவூட்டப்படும்.
39. ரூபாய் இருபத்தாறு லட்சம் மதிப்பீட்டில் மூன்று பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய மற்றும் கடன் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும். உறுப்பினர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கிடும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய மற்றும் கடன் சங்கம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்டம் லாயல் மில் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய மற்றும் கடன் சங்கம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய மற்றும் கடன் சங்கம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், மொத்தம் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
40. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 2500 நியாய விலைக் கடைகள் பொலிவூட்டப்படும். அனைத்து மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க கூட்டுறவுத் துறையின் கீழ் நியாய விலைக் கடைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெற 2500 நியாய விலைக் கடைகள் பொலிவூட்டப்படும்.
41. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5000 நியாய விலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறப்படும். கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முழுமையான தர மேலாண்மையை உறுதி செய்யும் பொருட்டு 5000 நியாய விலை கடைகளுக்கு ISO 9001 மற்றும் ISO 28000 போன்ற தர சான்றிதழ்கள் பெறப்படும்.
42. பணியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்க “இடர் களையும் நிதி” (Risk Alleviation Fund) உருவாக்கப்படும். பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தவிர்க்க முடியாத இடர்பாடுகளால் ஏற்படும் வாராக்கடன் மற்றும் நிதி இழப்புகளைக் குறைக்கவும், பிணையதாரர்களின் நிதி நலனைப் பாதுகாக்கவும் “இடர் களையும் நிதி” உருவாக்கப்படும். வாரிசுகள் இல்லாத உறுப்பினர்களின் மரணம், பணிநீக்கம், மருத்துவச் செயலிழப்பு முதலான காரணங்களால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய இந்நிதி பயன்படுத்தப்படும்.
43. ரூபாய் எட்டு கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படும். சென்னை தீவுத்திடல் சத்தியவாணிமுத்து நகரில் வசித்துவரும் ஏழை எளிய மக்கள் வங்கிச் சேவைகளை எளிதாகப் பெற வங்கிக் கிளை, அவர்களுக்கு நியாயமான விலையில் தரமான நுகர் பொருட்கள் கிடைக்க சிறப்பங்காடி, தற்போது வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் சென்னை மாவட்டக் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
44. கூட்டுறவுச் சங்கங்களின் ஐநூறு உறுப்பினர்களுக்கு வெளி மாநிலங்களில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் சேவைகளை மேம்படுத்த, பிற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு அங்கு செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கூட்டுறவுச் சங்கங்களின் 500 உறுப்பினர்களுக்கு வெளிமாநிலங்களில் நேரடிப் பயிற்சி அளிக்கப்படும்.
45. ரூபாய் நான்கு கோடி மதிப்பீட்டில் உறுப்பினர் கல்வித் திட்டம் மற்றும் இளைஞர் ஈர்ப்பு முகாம் ஆகியவற்றை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு கணினி உள்ளிட்ட நவீன உபகரணங்கள் வழங்கப்படும். மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலமாக நடத்தப்படும் உறுப்பினர் விழிப்புணர்வு முகாம், இளைஞர் ஈர்ப்பு முகாம் மற்றும் கூட்டுறவு சேவைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கும் கணினி, படக்காட்டி, நிழற்படக் கருவி மற்றும் வாகனம் போன்றவை ரூ.4 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
46. கூட்டுறவு இயக்கத்தில் இளைய தலைமுறையினரை அதிக அளவில் பங்கு பெறச்செய்ய சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தி கூட்டுறவு அமைப்புகள் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடையே உருவாக்கியும் நவீன வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தியும் மாணவ, மாணவியருக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, தொடர் இட்டு வைப்புக் கணக்கு போன்றவை தொடங்கப்படும். இளம் தலைமுறையினரைக் கவரும் வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் வழங்கும் நவீன சேவைகள் குறித்த தகவல் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கொண்டு செல்லப்படும்.
47. சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு மாபெரும் கூட்டுறவு கண்காட்சி நடத்தப்படும். சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு, நமது மாநிலக் கூட்டுறவுகளின் சிறப்பம்சங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலும், கூட்டுறவுகளின் சிறந்த செயல்பாடுகளைப் பகிரவும், கூட்டுறவு அமைப்புகளின் தரமான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்திடவும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும் பங்குபெறும் வண்ணம் இந்திய அளவிலான கூட்டுறவுக் கண்காட்சி நடத்தப்படும்.
48. சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ கொண்டாடும் பொருட்டு “கூட்டுறவு மாரத்தான்” நடத்தப்படும். கூட்டுறவுச் சங்கங்களால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கூட்டுறவு அமைப்புகள் வழங்கி வரும் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களிடையே கொண்டு சேர்க்கவும், இளைய தலைமுறையினரை கூட்டுறவு அமைப்புகளில் அதிக அளவில் பங்கேற்கச் செய்யவும் அனைத்து மாவட்டங்களிலும் “கூட்டுறவு மாரத்தான்” நடத்தப்படும்.
49. சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கூட்டுறவாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். கூட்டுறவின் மாண்பைப் போற்றும் விதமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு 2025 ஆம் ஆண்டை சர்வதேசக் கூட்டுறவு ஆண்டாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இந்தியாவிலேயே முதலாவதாகக் கூட்டுறவு சங்கம் கண்ட நமது மாநிலத்தில் பல்வேறு விதமான கூட்டுறவு அமைப்புகள் ஏழை எளிய பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது முதல் மாவட்டங்களுக்கிடையே பரவலான பொருளாதார முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றன. இப்பெருமைக்குக் காரணமான கூட்டுறவு அமைப்புகளுக்கும் கூட்டுறவாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
The post 1000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க தலா ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.