கராச்சி, மே 15: ஐபிஎல் போட்டிகள் துவங்கும் 17ம் தேதியே, பிஎஸ்எல் போட்டிகளை மீண்டும் துவக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியா – பாக். இடையே திடீரென போர் சூழல் உருவானதால், இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் 18வது தொடர் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின், இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்ததை அடுத்து, ஐபிஎல் போட்டிகள் வரும் 17ம் தேதி துவங்கும் என, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இறுதிப் போட்டி, ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டிகளை போல், பாகிஸ்தானில் நடத்தப்படும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) போட்டிகளும், போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்டன. அப்போட்டிகள், வரும் 17ம் தேதி மீண்டும் துவங்கும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தும் திட்டத்தையும், பாக். கிரிக்கெட் வாரியம் கைவிட்டுள்ளது.
பிஎஸ்எல்லில் இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. மீதமுள்ள போட்டிகளில் ஒரு லீக் போட்டி வரும் 17ம் தேதி, ராவல்பிண்டியிலும், 18ம் தேதி, ராவல்பிண்டியில் இரு லீக் போட்டிகளும், 19ம் தேதி அதே நகரில் மற்றொரு லீக் போட்டியும் நடைபெற உள்ளன. வரும் 21ம் தேதி, லாகூரில், குவாலிபையர் போட்டியும், 22, 23 தேதிகளில் லாகூரில் இரு எலிமினேட்டர் போட்டிகளும் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி, வரும் 25ம் தேதி, லாகூரில் நடக்கும் என பாக். கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
The post தேதியில் கூட ‘காப்பி’ அடிக்கிறாங்கப்பா… ஐபிஎல்லுடன் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தானின் பிஎஸ்எல் : 17ம் தேதி மீண்டும் போட்டிகள் துவக்கம் appeared first on Dinakaran.