*போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
நல்லம்பள்ளி : 100 ஆண்டை கடந்த நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கடைகளை தர்மபுரி – சேலம் பிரதான சாலையில் அமைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் 32 ஊராட்சிகளை கொண்டு ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது. நல்லம்பள்ளியை மையமாக கொண்டு 100 ஆண்டை கடந்த வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த வாரச்சந்தை 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. செவ்வாய்க் கிழமை தோறும் நடக்கும் இந்த சந்தைக்கு தண்டுகாரம்பட்டி, தொப்பூர், ஜருகு, நாகாவதி அணை, லளிகம், மிட்டாரெட்டி அள்ளி, மாதேமங்கலம் போன்ற 200க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் மட்டுமின்றி வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர்.
இந்த வாரச்சந்தையில் சேலம், மேச்சேரி, மேட்டூர் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து சந்தைகளில் வியாபாரம் செய்கின்றனர். சந்தையில் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மளிகை பொருட்கள், மசாலா பொடிகள், பருப்பு வகைகள், மண் பாண்டங்கள், மூங்கில் கூடைகள், கயிறு, கருப்பட்டி, வெல்லம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், இரும்பு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
வாரச்சந்தையில் அரசால் கடைகள் கட்டிக்கொடுத்திருந்தாலும், சிறு வியாபாரிகள் தர்மபுரி – சேலம் மெயின்ரோட்டில் கடைகள் வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கடைகளை வாரச்சந்தைக்குள் வைக்கும்படி அதிகாரிகள் கூறினாலும், திரும்ப வந்து அதே சாலையோரத்திலேயே கடைகள் அமைக்கின்றனர். இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் கடைகள் அமைப்பதால், இரவு நேரத்தில் மட்டும் நகர பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாது. உள்ளூரில் விளையக்கூடிய தக்காளி, கத்தரி, வெண்டை, முருங்கை, பீர்க்கங்காய், முள்ளங்கி உள்ளிட்ட பலவகையான காய்கறிகளும், பூக்களும் டன் கணக்கில் வியாபாரமாகிறது. காலை 6 மணிக்கு தொடங்கும் வியாபாரம் இரவு 8 மணி வரை நடக்கும். சந்தையில் காய்கறி, மளிகை பொருட்கள், கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற ஆங்கில காய்கறிகளும் வாங்கி வந்து சீரான விலையில் விற்பனை செய்கின்றனர். ஆங்கில காய்கறிகள் சுமார் 5டன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரச்சந்தைக்கு நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள பாகல்அள்ளி ஊராட்சி, அதியமான் கோட்டை ஊராட்சி, லளிகம் ஊராட்சி, நார்த்தம்பட்டி ஊராட்சி, பூதன அள்ளி ஊராட்சி என 30க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். தர்மபுரி உழவர் சந்தை, ஒட்டப்பட்டி உழவர் சந்தையில் கிடைக்காத காய்கறிகள் கூட இந்த வாரச்சந்தையில் கிடைக்கும்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்திற்கு அடுத்த படியாக வீடுதோறும் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். இதனால் குடும்ப செலவுக்கு தேவை என்றால் ஆடு, கோழிகளை சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்து குடும்பம் நடத்தி வருகிறோம்.
காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க எளிதாக உள்ளது. ஆனால் வாரச் சந்தையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான குடிநீர், கழிவறை வசதி முறையாக கிடையாது. விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடு, மாடுகளுக்கு வழங்கக்கூட போதிய தண்ணீர் வசதி கிடையாது. சந்தையில் உள்ள 2 சிசிடிவி கேமராக்களும் செயல் படுவதில்லை’ என்றனர்.
இதுகுறித்து சந்தை வியாபாரிகள் கூறியதாவது: நல்லம்பள்ளி சந்தையில் விடியற்காலை முதலே ஆடுகள் விற்பனை நடைபெறும். ஆடுகளை வாங்குவதற்காக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளாமானோர் வருகின்றனர். வார நாட்களில் விலை குறைவாக இருந்தாலும் திருவிழா நாட்களில் விலை உயரும். கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையான 10 கிலோ எடைகொண்ட ஆடுகள் தீபாவளி நெருங்கியதால், இந்த வாரம் ₹8 ஆயிரத்திற்கு விற்பனையானது. காய்கறிகள் வழக்கமாக 7 முதல் 8 டன் வரை விற்பனையாகிறது.
சந்தையில் காய்கறி கடை, இரும்பு பொருட்கள் கடை என சுமார் 100 கடைகளுக்கு மேல் உள்ளது. இந்த கடைகளுக்கு குத்தகைதாரர் ரூ.30 முதல் ரூ.100 வரை நிர்ணயம் செய்து வசூல் செய்து வருகிறார். பொதுமக்களுக்கும், வாரச்சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி முறையாக கிடையாது. விற்பனைக்காக ஆடு, மாடுகள் அதிக தொலைவில் இருந்து வருவதினால் அவற்றிற்கு கூட தண்ணீர் வசதி கிடையாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சந்தையில் விடியற்காலை 3 மணி முதல் காலை 7 மணி வரை கால்நடைகள் விற்பனை நடக்கிறது. காய்கறிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.
வருடம் ஒருமுறை சந்தை குத்தகை ஏலம் விடப்படுகிறது. குத்தகைதாரர் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகள் மற்றும் கடைகளுக்கு ரசீது மூலம் பணம் வசூல் செய்து வருகிறார். வருடம் ஒருமுறை ஏலம் விடுவதினால் சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. பொது மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அவ்வப்போது பூர்த்தி செய்து வருகிறோம். காய்கறி விற்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வது இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
திப்புசுல்தான் படைவீரர்கள் குதிரையை கட்டி வைத்த இடம்
தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் வாரச்சந்தைகளில் இதுவும் ஒன்று. நூற்றாண்டுகளை கடந்து இந்த வாரச்சந்தைக்கு தனி வரலாறு உண்டு. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, தற்சமயம் சந்தை உள்ள பகுதியான ‘ராஜா’ தோப்பு இன்றைய இடத்திற்கு மாற்றப்பட்டது. மைசூர் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த காலக்கட்டத்தில் ராஜா தோப்பு ஏற்படுத்தப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திப்புசுல்தான் படைவீரர்கள் குதிரையை கட்டி வைத்த இடம் தான் தற்போதைய வாரச்சந்தையாக உள்ளதாக கூறப் படுகிறது. 1946ம் ஆண்டுகளில் இப்பகுதியில் காலரா நோய் பரவியது. அப்போது இந்த வாரச்சந்தை தற்காலிகமாக கன்மாரிக் கொட்டாய் பகுதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டது. நல்லம்பள்ளி ஒன்றிய கட்டுப்பாட்டில் இந்த வாரச்சந்தை இயங்கி வருகிறது.
ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
இந்த வாரச்சந்தையில் மற்றொரு புறத்தில் கால்நடை சந்தையும் விறுவிறுப்பாக நடக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் கோடி ரூபாய்க்கு ஆடு, கோழிகள் வியாபாரம் நடக்கும். இதுபோக கறவை மாடு, இறைச்சி மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தையில் குறிப்பாக, ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடுகளை வாங்குவதற்காக கர்நாடக மாநிலம், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குவிகின்றனர். திருவிழா நாட்களில் ரூ.1000 முதல்ரூ.2000 வரை கூடுதல் விலையில் ஆடுகள் விற்பனையாகும். நேற்றைய சந்தையில் ஆடுகள் மட்டும் ரூ.50 லட்சத்திற்கு மேல் விற்பனையானது.
The post 100 ஆண்டை கடந்த நல்லம்பள்ளி சந்தையில் கடைகள் ஒதுக்கினாலும் சாலையில் கடை போடும் வியாபாரிகள் appeared first on Dinakaran.