சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் தமிழ்க் கட்டாயப் பாடம் நீட்டிக்கப்பட்டு, 2025-26-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.