10 கல்லூரிகளை தொடங்க அறிவிப்பு கொடுக்கப்பட்டதில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் பிறகு 4 கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

23 hours ago 1

சென்னை: சட்டசபையில் காரைக்குடி எஸ்.மாங்குடி(காங்கிரஸ்) பேசுகையில் “காரைக்குடி தொகுதி, தேவக்கோட்டையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மகளிர் கலைக்கல்லூரி துவக்க அரசு முன் வருமா? என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கல்லூரிகளை தொடங்க அறிவிப்பு கொடுத்திருந்தோம். பல்வேறு சட்ட போராட்டங்களுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் பிறகு 4 கல்லூரிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கின்ற 6 கல்லூரிகளுக்கு நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுத்திருக்கின்றது. அந்த வழிகாட்டுதல்களை முடித்த பிறகு, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் துறையின் சார்பில் கலைக் கல்லூரி அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளையும் நிறைவு செய்த பிறகு வாய்ப்பு இருந்தால் கோரிக்கை வைத்துள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வரின் அனுமதி பெற்று நிறைவேற்றி தரப்படும்’’ என்றார். எஸ். மாங்குடி: தேவகோட்டையில் உள்ள சிலம்படி சிதம்பர விநாயகர் திருக்கோயில் தேவஸ்தானத்திற்குட்பட்டது. அந்த வெள்ளை பிள்ளையார் கோயில் சுற்றி வணிக கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ள வியாபாரிகள் பயன்பெறும் வகையிலும், அறநிலையத்துறைக்கு வருவாய் ஏற்படுத்தும் விதமாகவும் அங்கு புதிய வணிக வளாக கட்டிடம் கட்டப்படுமா?. அமைச்சர் பி.கே.சேகர்பாபு: உறுப்பினர் கோரிய அந்த இடத்தில் வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக ஏற்கனவே மண்டல இணை ஆணையரிடம் கருத்துரு கேட்கப்பட்டிருக்கின்றது. நிதி ஆதாரங்களை பொறுத்து நிச்சயமாக அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

எஸ்.மாங்குடி: காரைக்குடி நகர் பகுதியில் அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான வார சந்தைக்கு 90 கடைகள் கட்டுவதற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அந்த கடை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 400 கடைகள் தேவை. இன்னும் 300 கடைகள் தேவை என்பதால் அந்த கடைகளும் கட்டித் தரப்படுமா? அதேபோன்று அந்த கோயில் சந்தை வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு திருமண மண்டபம் வேண்டும் என்று நான் ஏற்கனவே அமைச்சரிடம் வைத்துள்ள கோரிக்கையின்படி அது கட்டித் தரப்படுமா. அதேபோன்று, காரைக்குடி சங்கராபுரம் அருள்மிகு பொய் சொல்லா மெய் அய்யனார் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நடைபெற்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழா நடத்த வேண்டும்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அருள்மிகு பொய் சொல்லா மெய் அய்யனார் திருக்கோயிலுக்கு ஏற்கனவே 02.03.2024 அன்று ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்படும். அருள்மிகு கொப்புடை நாயகியம்மன் திருக்கோயிலில் கட்டப்பட்ட 90 கடைகள் கொண்ட வணிக வளாகம் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடமானது 6.4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் கட்டப்பட்ட அந்த 90 கடைகளை வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சட்டமன்ற உறுப்பினர் முயற்சிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் 288 கடைகள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஆணையரின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அந்த பணிகளும் விரைவாக தொடங்கப்படும்.

அங்கே ஏற்கனவே உள்ள கடைகள் அரசின் சார்பிலோ, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பிலோ அமைக்கப்படவில்லை. தனியார் ஒருவர் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து கடைகளை நடத்தி வந்ததோடு, அதிக வாடகை வசூல் செய்வதை அறிந்து தான் தற்போது 90 கடைகளை கட்டி இருக்கின்றோம். அந்த கடைகள் பயன்பாட்டிற்கு வர உதவிட வேண்டுமென சட்டமன்ற உறுப்பினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அவருடைய வேண்டுகோள் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது

The post 10 கல்லூரிகளை தொடங்க அறிவிப்பு கொடுக்கப்பட்டதில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கும், நீதிமன்ற வழக்குகளுக்கும் பிறகு 4 கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article