10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

3 days ago 2

வெல்லிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சல்மான் ஆகா 51 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக டிம் செய்பர்ட் மற்றும் பின் ஆலென் களம் இறங்கினர். இதில் பின் ஆலென் 27 ரன்னிலும், மார்க் சாம்ப்மென் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டேரில் மிட்செல் களம் புகுந்தார்.

மறுபுறம் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்பர்ட் சிக்சர் மழை பொழிந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி வெறும் 10 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது. 

Read Entire Article