மதுரை: சென்னை வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கைதான கல்பனாவிற்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் பிரபல வழக்கறிஞர் காமராஜ். மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகனான இவர், கடந்த 28.8.2014ல் கொளத்தூரில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் 3வது மாடியில் கல்பனா என்பவரின் வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வரும் வழியிலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் கூறிய நிலையில், சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளார் என கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கொலை வழக்காக கொரட்டூர் போலீசார் மாற்றம் செய்து, கல்பனா, கார்த்திக், ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், சிவில் வழக்குகள் கொடுத்தது தொடர்பாக கல்பனாவிற்கும், காமராஜிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.
பணம் வாங்குவதற்காக கல்பனாவின் வீட்டிற்கு வந்த போது தரைவிரிப்பு துணியால் முகத்ைத மூடி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்த வழக்கு கடந்த 2015 முதல் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி 2021ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, விசாரணை ஏன் தாமதமாகிறது என்பது குறித்து மாவட்ட நீதிபதி தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில், வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது. அரசுத் தரப்பு சாட்சிகள் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நவ. 19ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதன்படி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்பனா மீதான கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. கார்த்திக், ஆனந்த் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்’’ என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்டு கல்பனா கதறி அழுதார். பின்னர் அவர் மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post 10 ஆண்டாக நடந்த வழக்கு விசாரணை சென்னை வக்கீல் காமராஜை கொன்ற பெண்ணுக்கு ஆயுள்: மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.