1 லட்சத்து 8 வடைமாலை, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்; நாமக்கல், சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

3 weeks ago 5

நாமக்கல்: நாமக்கல், சசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தியும், 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாமக்கல்லில் கோட்டை ரோட்டில், உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் இரு கைகளையும் தூக்கியபடி வணங்கிய கோலத்தில் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாத அமாவாசையுடன் இணைந்து வரும் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று (30ம் தேதி) ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை 4.45 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்துக்காக திரைசீலை விலக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயில் வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜெய் ஆஞ்சநேயா என பக்தி கோஷமிட்டனர். நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

பிற்பகல் 11 மணியளவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நல்லெண்ணெய், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுசீந்திரம்: குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு ஷோடச அபிஷேகம் நடந்தது. 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆயிரம் லிட்டருக்கும் மேல் பால், தயிர், நல்லெண்ணெய், வெண்ணெய், இளநீர், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, பழச்சாறு, கரும்புச்சாறு, குங்குமம், சந்தனம், களபம், ஜவ்வாது, திருநீறு, பன்னீர், தேன் உள்பட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு ராமபிரானுக்கும், மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கும் பல்வேறு மலர் வகைகளால் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. 18 அடி உயர ஆஞ்சநேயரின் கழுத்து பகுதி வரை மலர்கள் நிறைத்து பூஜைகள் நடக்கிறது. பின்னர் இரவில் அலங்கார தீபாராதனை நடக்கிறது. இன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post 1 லட்சத்து 8 வடைமாலை, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்; நாமக்கல், சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article