
புதுடெல்லி,
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் ரெட்டிபள்ளி பகுதியில் 1937-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பிறந்தவர் தாரிப்பள்ளி ராமையா. வனஜீவி ராமையா என்றும் அழைக்கப்படும் இவர் தன்னுடைய வாழ்நாளில் 1 கோடிக்கும் கூடுதலான மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாதுகாத்து உள்ளார்.
அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நிலைத்தன்மைக்கான சாம்பியனாக ராமையா நினைவு கூரப்படுவார். லட்சக்கணக்கான மரங்களை நடுவதற்காகவும், பாதுகாக்கவும் வாழ்வை அர்ப்பணித்தவர். அயராத அவருடைய முயற்சியானது, வருங்கால தலைமுறையினருக்கான கவனிப்பு மற்றும் இயற்கைக்கான ஆழ்ந்த அன்பு ஆகியவற்றை பிரதிபலித்து உள்ளது.
பசுமையான பூமியை கட்டமைப்பதற்கான நீண்ட தேடலில் உள்ள நம்முடைய இளைஞர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் அவருடைய பணி இருக்கும். இந்த சோக தருணத்தில், அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் என்னுடைய நினைவுகள் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
பொதுமக்களுக்கு கனிகளையும், நிழலையும் கொடுக்கும் மரங்களை பாதுகாக்கும் பணியை 50 ஆண்டுளுக்கும் கூடுதலாக மேற்கொண்டு வரும் அவர், விதைகளை சேகரித்து, பைகளில் போட்டு கொள்ளும் வழக்கம் கொண்டவர். அவற்றை காலியாக உள்ள நிலத்தில் தூவி விடுவார். சேவா விருது, வனமித்ரன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய 87-வது வயதில் இன்று காலமானார்.